Skip to main content

ஆசிரியையின் கணவர் திடீர் மரணம் - கொலையா? தற்கொலையா? மாறுபட்ட தகவல்களால் போலீசார் குழப்பம்!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

teacher husband incident police investigation in salem district police investigation

 

 

கெங்கவல்லி அருகே தனியார் பள்ளி ஆசிரியையின் கணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும், அவரே கை, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் மாறுபட்ட தகவல்கள் கிடைத்ததால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவருடைய மகன் முருகன் என்கிற சதீஷ் (வயது 42). இவருடைய மனைவி வனிதா (வயது 30). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

 

வனிதா, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில்தான் அவர்களின் மகனும் படிக்கின்றான். திருமணம் ஆன நாளில் இருந்தே முருகன் எங்கேயும் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் வனிதாதான் குடும்பச் செலவுகளை கவனித்து வந்துள்ளார். 

 

முருகனுக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஊரில் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். 

 

இதனால் அவர் தற்போது குடியிருந்து வரும் வீட்டை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், அமுதா என்பவரிடம் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். 

 

இதற்காக அமுதா, அவருக்கு வங்கி கணக்கு மூலம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். முருகன், வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததால், அதற்கான தொகையையும் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைக் கொண்டு அவர் யார் யாரிடம் கடன் வாங்கியிருந்தாரோ அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து வந்தார். 

 

இந்நிலையில், செவ்வாய் கிழமை (ஆக. 16), வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்த வனிதாவும், அவருடைய மகனும் மாலையில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு, முருகன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். 

 

கை, கால்களில் கத்தியால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. சடலத்தைப் பார்த்து வனிதாவும், மகனும் கதறி அழுதனர். இதுகுறித்து கெங்கவல்லி காவல்நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். 

 

காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

வீடு விற்பது தொடர்பாக அமுதா என்பவர் வங்கி கணக்கு மூலம் செலுத்தியிருந்த பணத்தை, கடன்காரர்களுக்கு கொடுப்பதற்காக முருகன் பணத்தை எடுத்து வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை வீடு வரை பின்தொடர்ந்து வந்து, கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்