தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்றும் (09/05/2021) நேற்று முன்தினமும் (08/05/2021) தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் செயல்படும் நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளின் முன் குவிந்து மதுப்பானங்களை வாங்கிச் சென்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூபாய் 428.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 98.96 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 97.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், கோவை மண்டலத்தில் ரூபாய் 67.89 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 87.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 76.57 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
சனிக்கிழமை அன்று ரூபாய் 426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் ரூபாய் 428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.