தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) தொடங்கியது. இந்த நிலையில் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிந்தைய தேர்தல் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (12/03/2021) தொடங்கினார். சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சித்ராவை ஆதரித்து முதல்வர் வாக்குச் சேகரித்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் (11/03/2021) காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சீமான் புறப்பட்டார். அந்த மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே அவருக்காகக் கட்சியினர் காத்திருந்தனர். அப்போது மணி இரவு 10.00-ஐ கடந்தால், காவல்துறையினர் மின்விளக்குகளைத் துண்டித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாமதமாக பிரச்சார இடத்துக்குத் திறந்தவெளி வேனில் வந்த சீமான் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சஞ்சீவிநாதனை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறையை மீறி, இரவு 10.00 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டதாக சீமான் மீது செங்கல்பட்டு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.