நிவர் புயல் தாக்கும் என்ற காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. வங்கிகளுக்கும் கூட விடுமுறை விடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகள் என 278 பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்களுக்கென 28 பாதுகாப்பு முகாம்களும், 191 தற்காலிக பாதுகாப்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் முதல் தகவல் அளிப்பவர்கள், கால்நடை பாதுகாப்பு மையம் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநர்கள் இப்படி அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு உடனடியாக அழைத்து வருவதற்கு மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தேவையான உணவுப் பொருட்கள், சமையல் செய்ய கேஸ் சிலிண்டர்கள், அடுப்புகள், குடிநீர், கழிவறை, மின்வசதி உட்பட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இப்படிப்பட்ட காலத்தில் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுப்பதற்கு போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு போல பொதுமக்கள் காரணமின்றி யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. புயல் தாக்கம் உள்ள இந்த நேரத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் மீது அக்கறை கொள்ளாத தமிழக அரசுக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பேருந்துகள் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. வங்கிகள் இயங்கவில்லை ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் இயங்கவேண்டும் என்று அரசின் நிலைப்பாடு ஏன் என்று அதன் ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் வண்ணம் முகாம்களை அமைத்து தங்க வைப்பதும் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தும் அரசு, டாஸ்மாக் கடை திறந்தால் அங்கே குடிப்பதற்கு வரும் ஏழை எளிய மக்களுக்கும் கடை ஊழியர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாதா? அரசின் நிலைப்பாடுகளில் ஏன் இப்படிப்பட்ட முரண்பாடுகள் எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்நிலையில் தமிழக அரசு செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் பிற மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் மதுக்கடைகளை மூடலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதனை அடுத்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட சில மாவட்டங்களில் டாஸ்மாக் கடையை மூடுமாறு தற்போது அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதையடுத்து கடைகள் மூடப்படுகின்றன.