தமிழ்நாட்டில் உள்ள பார்களில் போலி மது விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. போலி மது தயாரிப்பு கும்பல், டாஸ்மாக் கடைகளில் வாங்கி பாரில் மதுவை விற்கும் போது பாட்டிலுக்கு ரூ.50 தான் லாபம் கிடைக்கும். ஆனால், எங்க சரக்கை விற்றால் ஒரு பாட்டிலுக்கு ரூ.100 லாபம் கிடைக்கும் என்று டாஸ்மார்க் பார்களை அனுகி ஆசை வார்த்தை கூறி அணுகுகின்றனர். இந்த கும்பலே எசன்ஸ் ஊற்றி கலந்த மதுவை குவாட்டர், ஆஃப் பாட்டில்களில் தனித்தனியாக அடைத்து, சம்பந்தப்பட்ட பாட்டில்களில் உள்ள நிறுவன பெயரிலேயே லேபிளை ஒட்டி புதிதாக மூடி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி ஒரிஜினல் மதுபோலவே தயார்படுத்துகின்றனர். பின் அந்த பாட்டில் மதுவை ரூ.50க்கும், ரூ.80க்கும் மொத்தமாக விறபனை செய்கின்றனர். இதனால் டாஸ்மாக் விற்பனை குறைந்து போலி மது விற்பனை அமோகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் சிவகங்கை மாவட்டத்தில் போலி மது செய்து விற்கும் கும்பல் குறித்து சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, மது தயாரிப்பு கூடம் காலியாக இருந்திருக்கிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சென்னை (மதுரை) மண்டல நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி காசிவிஸ்வநாதன், திருச்சி மத்திய மண்டல நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் பல நாட்களாக நடத்திய ரகசிய விசாரணையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூரில் அந்த கும்பல் விற்பனையைத் தொடங்கியுள்ளது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் சங்கர், மச்சுவாடி மாரிமுத்து என அடுத்தடுத்து 3 பேரையும் சரக்கு பாட்டில்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் மற்றும் ஓட்டுநரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவகங்கையில் எடுத்து வந்த போலி மது தயாரிக்கும் மூலப்பொருட்களான எசன்ஸ், லேபிள், ஸ்டிக்கர், மூடிகள், மூடிகளை லாக் செய்யும் மெசின், ஸ்பிரிட் ஆகியவை புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு விவசாயியின் தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தோட்டத்தில் ஆய்வு செய்த போது 4 பேரல் ஸ்பிரிட் மற்றும் அனைத்து மூலப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைப்பற்றி ஒரு சரக்கு வேனில் ஏற்றி பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.