தமிழகத்தில் ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா?. வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் தொடங்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், “ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் எதுவும் இல்லை. அதோடு டெட்ரா பாக்கெட் எனப்படும் காகிதக் குடுவையின் மூலம் மதுவை அறிமுகம் செய்யவும் திட்டமிடவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.