வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் தாம்பரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''தாம்பரம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அத்தனை மாநகராட்சிகளிலும் மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு இடங்கள் ரெடியாக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான எல்லா சாப்பாடு வகைகளும் ரெடியாக இருக்கிறது. ரொட்டி, பால், பிரட் தயாராக உள்ளது. தாம்பரத்தில் மட்டும் 11 இடங்களில் சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமாக மக்கள் பாதிக்கப்படும் பொழுது அவர்களை கொண்டு வந்து வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் அதிகமாக இருந்தால் அழைத்துச் செல்வதற்கு போட் ரெடியாக இருக்கிறது. இங்கு மட்டுமல்ல குன்றத்தூர், பூந்தமல்லி, மாங்காடு, ஆவடி என் எல்லா இடத்திலும் இன்று ஆய்வு செய்ய இருக்கிறோம். என்னென்ன தேவையோ அதை எல்லாம் தமிழக முதல்வர் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். கடந்த மழையில் இருந்ததைவிட பாதிப்பு குறைவாக இருக்கும். திட்டங்கள் போட்டு 90 கோடி ரூபாய் நீர்வளத் துறையின் சார்பில் வாய்க்கால் கட்டுகிறோம். ஹை வேஸில் ஒருபக்கம் பிடபிள்யுடி, ஹைவே டிபார்ட்மென்ட் எஸ்டிமேட் போட்டு பணம் சென்றுள்ளது. டிரைனேஜ் கட்ட ஏற்பாடுகள் செய்துள்ளோம். மாநகராட்சியை பொறுத்தவரை எல்லா இடத்திலும் நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம். எது அவசியமோ, பெர்மனன்டா செய்ய வேண்டிய வேலை ஆன் கோயிங்கில் இருக்கிறது'' என்றார்.
செய்தியாளர் ஒருவர், 'சார் அனகாபுத்தூர் சாலை மழையில் சேதமடைந்து விட்டது' என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, ''சாலை போடுவதற்கு நேற்று பணம் கொடுத்து விட்டோம். தாருக்கும் தண்ணிக்கும் பகை தம்பி. மழை பெய்யும் பொழுது தார் பள்ளம் மேடாகதான் ஆகும். சரி செய்துதான் ஆக வேண்டும். எல்லா இடத்திலும் இது நடப்பது தான். எனவே நல்லா இருந்த ரோடு இப்படி போய்விட்டதே. உடனே சரி பண்ணு என்று சொல்கிறார்கள். மழை விட்டவுடன் சரி பண்ணி கொடுத்து விடுவோம்'' என்றார்.