Skip to main content

தஞ்சை தேர் விபத்து! காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்! 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 


 

இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. இந்நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்பு குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது. 


இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் இன்று பகல் 11.30 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றார். அதற்கு முன்பாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அமைச்சரும், எம்.எல்.ஏவும் ஆறுதல் கூறினர். முதலமைச்சரின் வருகைக்கு முன்னதாக அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இருந்து காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறியது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.  

 

 

சார்ந்த செய்திகள்