அதிமுக வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முட்டல் மோதல்கள் தெடங்கி உச்சகட்டத்தில் உள்ளது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் இரு தரப்பையும் தனித்தனியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 7 ந் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எடப்பாடியும் ஓ.பி.எஸ் ம் இணைந்து அறிவிப்பார்கள் என்று செய்திகள் கொடுக்கப்பட்ட பிறகு பிரச்சனை உச்சம் தொட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளால் யார் யார் பக்கம் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை தனித்தனியாக அழைத்து ஆலோசனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மாஜி அமைச்சரான கு.ப.கிருஷ்ணன் ஜனவரியில் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் உடன் என்று பதிவிட்டவர். சில நாட்களுக்கு முன்பு தனது முகநூலில் முதல்வர் எடப்பாடியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு "எடப்பாடியுடன் நான்" என்ற சிறிய பதிவும் போட்டிருந்தது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவரும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளரும் அவரால் மாணவரணி பதவி வகிப்பவருமான எஸ்.எம்.நீலகணடன் அவர் இணைந்துள்ள வாட்ஸ் அப் குழுக்களில் மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்த வேண்டும் என்று ஒரு பதிவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்...
"மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நிராகரிக்கப்படாமல் எந்த நேரமும் போயஸ் கார்டன் சென்று வந்த, அம்மாவின் ஆணைப்படி பணி செய்து கழகத்தை இணைத்து காத்த, கழகத்தை உயிர் மூச்சாகக் கருதும் மாண்புமிகு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஆர். வைத்திலிங்கம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு, கழகத்தில் பணியாற்றும் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் 07.10.20. நடைபெறும் பொதுக்குழுவில் அண்ணன் ஆர். வைத்திலிங்கம் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி உரக்க குரல் கொடுப்போம்."
இந்தப் பதிவால் அதிமுகவில் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வைத்திலிங்கமே இப்படி ஒரு பதிவை வெளியிட வைத்து தானும் முதல்வர் கனவில் இருப்பதை தெரியப்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள் ர.ரக்களே. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்னும் யார் யார் எல்லாம் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஆகத் துடிக்கிறார்களோ? இப்படி வெளிப்படையான பரபரப்புகள் இருந்தாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றவர்கள் அமைதியான முறையில் டெல்லி மூலம் முதல்வர் வேட்பாளர் ஆக காய் நகர்த்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.