மொழிப்போர் தியாகிகளுக்கான நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமையன்று (ஜன. 25) சேலம் வந்திருந்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் டிஎன்பிஎஸ்சி முறைகேடு, பெரியார் பற்றி ரஜினியின் சர்ச்சைக்குரிய பேச்சு உள்ளிட்ட வினாக்களை எழுப்பினர். அதற்கு வைகோ பதில் அளித்ததாவது:
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது வெட்கக்கேடானது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களில் எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்ய மாட்டோம் என்று அமைச்சர் கருப்பணன் பேசியிருப்பது, மிகவும் பொறுப்பற்ற பேச்சு கண்டிக்கத்தது. அவர் மட்டுமின்றி, வேறு பல அமைச்சர்களும் பொறுப்பற்ற முறையில்தான் பேசி வருகின்றனர்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதற்கும், மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை கூறுகிறது. 7 பேர் விடுதலையில், மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை விடுவிப்பது ஆளுநரா அல்லது இங்கு ஆட்சியில் இருப்பவர்களா?
பெரியார் பற்றிய பேச்சு மறந்து போக வேண்டியது என்று கூறும் ரஜினி, துக்ளக் விழாவில் எதற்காக அதைப்பற்றி பேச வேண்டும்? மறக்க வேண்டியதை ஏன் ரஜினி கையில் எடுத்தீர்கள்? தான் பேசியது தவிர்த்திருக்க வேண்டிய பேச்சு என்று இனியாவது ரஜினி தெரிவிக்க வேண்டும். தமிழர்களின் இன உணர்வு, பாரம்பரியம் போன்றவற்றை மறைக்க பாஜக மேற்கொள்ளும் பல்வேறு சம்பவங்களில் ரஜினி பேசியதும் ஒன்று என்று கருதுகிறேன். இவ்வாறு வைகோ பதில் அளித்தார்.