மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் கடலூர் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதுக்கு மேல் 50 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தடகளம், கைப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து டென்னிஸ் விளையாட்டுகளுக்கு சமூக எடையுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேசமயம் டேக்வாண்டோ, கராத்தே, குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
குழு விளையாட்டு நுணுக்கங்களை கற்க குறைந்த நபர்களுடன், சமூக இடைவெளியுடன் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்படும். பயிற்சிக்கான படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியாளர்கள் தங்களது முழு விவரங்களை பதிவேட்டில் பதிய வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகள் தனித்தனி விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், பயிற்சி மேற்கொள்ள வருபவர்களுக்கு வெப்பமானி பரிசோதனை செய்யப்படும். இதற்கான தனி குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பயிற்சிக்கு முன்பும் பின்பும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்பட தடை தொடர்கிறது.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04142 220590 அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மொபைல் எண் 7401703495 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.