சென்னை தண்டையார் பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்த புவனா என்ற பெண்மணி வீட்டு வேலைக்காக குவைத்திற்கு வந்த இடத்தில் சித்ரவதை செய்யப்பட்டார் இது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.
வீட்டு வேலை செய்வதற்காக சூளைமேட்டில் உள்ள ஏஜெண்ட் வாயிலாக புவனா குவைத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் போலீஸ் அதிகாரியின் வீட்டில் வேலைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் புவனாவிற்கு பேசியபடி மாதச்சம்பளமும் தராமல் கழிவறையில் தங்கவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து புவனா வீடியோ பதிவினை வெளியிட்டார். அவர் கண்ணீர் மல்க பேசும் அந்த வீடியோவை நாம் நமது நக்கீரன் தளத்தில் வெளியிட்டோம். மேலும் புவனாவின் கணவர் மனைவியை மீட்க வேண்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீட்கும் முயற்சி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த பெண் அலாவுதீன் என்பவரால் மீட்கப்பட்டார். பெண்ணை மீட்ட அலாவுதீன் அவரை வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் பாதுகாப்பில் விட்டார்.
பத்து நாட்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலசங்கத்தின் பாதுகாப்பில் புவனா இருந்தார். இதனிடையே புவனாவின் பாஸ்போர்ட் அவர் பணிபுரிந்த வீட்டு முதலாளியிடம் பெறப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர்கள் நலசங்கத்தின் மருத்துவர் அணி செயலாளர் ஜான் ரமேஷ் புவனா விமானம் மூலம் சென்னைக்கு வர ஏற்பாடு செய்தார்.
தன்னை மீட்டு சென்னைக்கு அனுப்பி வைத்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நலசங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது சங்க நிர்வாகிகளான மண்டல தலைவர் அப்துல் மஜீத், மண்டல செயலர் திருச்சி முபாரக், மண்டல பொருளாளர் திருமா இருளப்பன், மண்டல துணை தலைவர் நவ்சாத் அலி, மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்து நாயகம், மண்டல ஆலோசகர் இதயத்துல்லாஹ், தேசம் மாடசாமி, மருத்துவ அணி செயலர் ஜான் ரமேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை மரைக்காயர், செயற்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.