சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (12/07/2021) காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, "மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை; அணையைக் கட்டியே தீருவோம். பிரச்சனைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் மேகதாது அணையை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை. மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாகப் பரிசீலிக்கும்" எனத் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "மேகதாது அணையை எந்த நிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம். ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது. நதிநீர் என்பது தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என கருதுகிறேன். தமிழகத்திற்கு வரும் நீரை மறித்து அணை கட்டுவோம் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணிப்பது போன்றது. இதையும் மீறி அணை கட்டுவோம் என்பது நீதிமன்ற தீர்ப்பை மதிக்கமாட்டோம் என கூறுவது போல் தெரிகிறது. இத்தகைய போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல. இதுபோன்ற போக்கு அண்டை மாநிலத்தின் உறவிற்கும் உகந்தது அல்ல" என நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடக உள்துறை அமைச்சருக்கு பதிலடி தந்துள்ளார்.