சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் போக்குவரத்தை இன்று முதல் இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
புறநகர் பேருந்துகளில் 32 பயணிகளும், நகர் மற்றும் மாநகர பேருந்துகளில் 40 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் 24 பயணிகள் பயணிக்க அனுமதி. 2,866 நகர பேருந்துகள், 2,637 புறநகர் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத்தொடங்கும்.
அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. காலை 06.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். இரண்டு அரசுப்பேருந்துகளில் சோதனை முயற்சியாக 'Patym' மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 'Paytm' மூலம் கட்டண வசூல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையைப் பயன்படுத்தலாம். 10- ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படும். அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படவில்லை" என்றார்.