
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் பிரிப்பால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவறையைப் பணிகள் முடிவடையாததால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (22/06/2021) விசாரணைக்கு வந்தபோது, தமிழக மாநில தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கரோனா பரவல் இன்னும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் தேர்தலை நடத்த இன்னும் ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்" கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே போதிய அளவு கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறி கோரிக்கையை நிராகரித்தனர். விடுபட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைப் பணியை முழுமையாக நிறைவு செய்து வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து, தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.