வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24% அதிகம் பெய்துள்ளது. சென்னையில் இயல்பான அளவில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடபுதுப்பட்டு, வேப்பூரில் தலா 13 செ.மீ., கட்டுமயிலூர், சிதம்பரத்தில் தலா 12. செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.