தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக கிராமப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்களிப்பதற்காக தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையம் வந்திருந்தார். இந்த சிலுவம்பாளையம் நெடுங்குளம் என்ற கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இந்த நெடுங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான மாதேஸ்வரன் என்பவரும், திமுக தரப்பில் சமீபத்தில் திமுகவில் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன் விஸ்வநாதனும் போட்டியிட்டனர். மேலும் இந்த ஊராட்சிக்குட்பட்ட 9-வார்டு கவுன்சிலர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை தனது குடும்பத்துடன் சிலுவம்பாளையம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அங்கிருந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தள்ளி நின்றனர். எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினர் மட்டும் வாக்குச்சாவடி முன்பு வரிசையில் நிற்க அதை பத்திரிகை நிருபர்கள் புகைப்படம் எடுத்தனர்.
பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்தவர்களை அழைக்க தொடங்கினார்."எப்பா வாங்க இங்க வாங்க.. அட மாப்பிள்ளை வாங்க வந்து என்னோட நில்லுங்க போட்டோ பிடிக்கிறாங்க வாங்க" என்று கிண்டலாக கூற, அதன்பிறகு சிலர் முதல்வர் எடப்பாடி வரிசையில் வந்து நின்றனர். ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கிருந்து தனது உறவினர்களிடம் "மாமா நல்லா இருக்கீங்களா, மாப்பிளே எப்படி இருக்கீங்க? தம்பி, அண்ணா என பாசத்தோடு உறவு முறைகளை பகிர்ந்து கொண்டார். இந்த நெடுங்குளம் பஞ்சாயத்து தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன் திமுக விஸ்வநாதன் வெற்றி பெறுவாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான அதிமுக விஸ்வநாதன் வெற்றி பெறுவாரா என அப்பகுதி கிராமங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது.