கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் இன்று டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 14 தேதியன்று 82 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனையடுத்து அந்த மருத்துவமனைக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அம்மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி டாக்டர் பரிமா முகர்ஜி என்பவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் தலை உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் (IMA) கண்டனம் தெரிவித்ததோடு, மருத்து வர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. மருத்துவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்கும் வகையில் கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதை தொடர்ந்து இன்று இந்தியா முழுவதும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் சார்பில் நாடு முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் IMA கூறியிருந்தது.
அதன்படி ஈரோடு சம்பத் நகரில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொல்கத்தா சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
டாக்டர் சுகுமார் என்பவர் நிருபர்களிடம் பேசும்போது, "கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தனியார் மருத்துவமனை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவர்களை தாக்கும் நபருக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்தியன் மெடிக்கல் அசோசியன் சார்பில் இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று ஒருநாள் அனைத்து டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கடுமையான சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் முதன்மை செயலாளருக்கு தபால் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவர்களின் போராட்டத்தால் ஈரோடு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே பணியில் இருந்தனர். நோயாளிகளான அப்பாவி மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்து மாத்திரைகளை வாங்கிச் சென்றனர்.