தமிழகத்தில் விமானச் சேவைக்கு அனுமதி அளித்துள்ளதோடு, அதற்கான புதிய வழிகாட்டுதலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஒத்துழைக்கும் வகையில் உள்நாட்டு விமானச்சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. மேலும் இதற்காக சில புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குத் தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளாக, தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும் எனவும், அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சொந்த வீடு இல்லாத பயணிகள் பணம் செலுத்தித் தனிமைப்படுத்தும் மையத்தில் சேர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் திருச்சியிலிருந்து மே 25 முதல் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல், விமான நிலைய வாசல்களில் மாவட்ட ஆட்சியர்கள் சோதனை மையம் அமைக்க வேண்டும், பயணிகள் செல்லும் வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், பயணிகளின் உடைமைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும், விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும் உள்ளிட்ட விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.