2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.
சிலநாட்களாக இந்தியா முழுவதும் 19 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க ஆர்.சி - பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி பணிகளை விரிவுபடுத்தவும் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸை 2.46 லட்சம் செலுத்திக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸை 1.43 லட்சம் பேர் மட்டுமே செலுத்திக்கொண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.