‘இதெல்லாம் எங்கே போயி முடியுமோ தெரியல..?’ என்று அரசியல் நோக்கர்கள் கவலைகொள்ளும் வகையில் சில வில்லங்க விவகாரங்கள் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், ”அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அதிமுக முன்னணித் தலைவர்களும் தமிழக முதல்வரும் கற்றுத்தர முன்வர வேண்டும். இதே அருவருக்கத்தக்க பாணியில் விமர்சித்து வந்தால், அரசியல் ரீதியான விபரீத விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்.” என்று எச்சரித்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். விருதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசபந்து மைதானத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
‘மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்’ எனத் தொடங்கி ‘மோடி எங்க டாடி..’ என்று பேசி பா.ஜ.க.வினரைக் கவர்ந்து, அதே ரீதியில் தொடர்ந்து ‘ஜிங்ஜாங்’ அடித்தபடியே இருப்பதால், மோடி உருவத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜியைப் பொருத்தி, சமூக வலைத்தளங்களில் ‘மீம்ஸ்’ போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் அசந்துவிடும் ஆளா இந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி?’ என்று காங்கிரஸ் கட்சியினரை மேலும் உசுப்பேற்றிவிட நினைத்தாரோ, என்னவோ? காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த அதே பாணியில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை, சாத்தூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கடுமையான வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு அர்ச்சித்திருக்கிறார்.
கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதையெல்லாம் அச்சில் அப்படியே தந்துவிட முடியாது. அந்த அளவுக்கு, மக்களவை காங்கிரஸ் கொறடாவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளாரும், விருதுநகர் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் மீது பேச்சில் அனல் கக்கியிருக்கிறார் அமைச்சர்.
‘தொகுதிப் பக்கம் வந்தால் எம்.பி.யை விரட்டி அடியுங்கள்..’ என்பதை கரடுமுரடான வார்த்தைகளில் பேசியிருக்கும் ராஜேந்திரபாலாஜி, மாணிக்கம் தாகூரின் டெல்லி அரசியலையும், அங்கிருந்தபடியே அறிக்கை வெளியிடுவதையும் விமர்சிக்கும் சாக்கில், அவருடைய குடும்பத்தினரையும் இழுத்திருக்கிறார். உச்சக்கட்ட ஆத்திரத்தில் “……… இங்கே வந்துச்சுன்னா சுட்ருங்க. ஆளைக் கொன்னுடாதீங்க. …… வந்துச்சுன்னா அடிக்கிற ரப்பர் குண்டு இருக்குல்ல. அதைவச்சு வயித்துல ரெண்டு அடி அடிங்க.” என்று இஷ்டத்துக்குப் பேசியிருக்கிறார்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல், காங்கிரஸ் கட்சியினருக்கு கொந்தளிப்பை அதிகப்படுத்திவிட்ட நிலையில், பத்திரிக்கையாளர்களையும் ஊடகத்தினரையும் இன்று காலை 10.30 மணிக்குச் சந்திக்கவிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.
கட்டுரையின் முதல் வரிக்கே மீண்டும் வருவோம்! இது எங்கே போய் முடியுமோ?