“எல்லோருக்கும் படியளப்பார் எம்பெருமான்..” என்று ஒருவர் கூற, “காலையிலிருந்து ஒரு எறும்பை இந்தக் குப்பியிலே அடைத்து வைத்திருக்கிறேன். இந்த எறும்புக்கு உன்னுடைய எம்பெருமானால் எப்படிப் படியளந்திருக்க முடியும்?” என்று அவரை இன்னொருவர் மடக்க, “குப்பியைத் திறந்து பார்..” என்பார், எம்பெருமான் மீது நம்பிக்கை கொண்டவர். பெட்டியைத் திறந்து பார்த்தால், அந்த எறும்பு ஒரு அரிசியைக் கவ்விக் கொண்டிருக்கும்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்தக் காட்சியை டிவியில் பார்த்தபடியே “அட, ஆமாம்பா.. இந்தக் கரோனா லாக்டவுன் நேரத்துல விருதுநகர் மாவட்டத்துல சுற்றிச் சுற்றி வந்து நிவாரணம் கொடுத்துக்கிட்டிருக்கோம். மனிதர்கள் போலத்தானே ஜீவராசிகளும்.. நமது மாவட்டம் திருச்சுழியிலே பிறந்த பகவான் ரமண மகரிஷி நாய், பசு, அணில், குரங்கு என சகல ஜீவராசிகளையும் மனிதர்களைப் போல, அதுவும் குழந்தைகளைப் போலவே பாவிப்பாராம். ஜீவராசிகளைப் பசங்க என்றே சொல்வாராம். மிருகங்களைக்கூட அவன், அவள் என்று உயர் திணையிலேயே குறிப்பிடுவாராம். நான் இதைப் படிச்சிருக்கேன்.” என்று வீட்டில் இருந்தவர்களிடம் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.
மறுநாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அமைச்சர், அங்கு ஆடிப்பூர கொட்டகையில், யானை மண்டபத்தில் இருந்த யானைக்கு பூசணிக்காய், வெல்லம், பழங்களெல்லாம் கொடுத்தார். அடுத்து ராஜபாளையம் வனப்பகுதிக்குச் செல்லும் வழியில், குதிரை, பசுமாடுகளுக்குப் பழங்களை ஊட்டிவிட்டார். மேற்குத் தொடர்ச்சிமலை வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் அவரைச் சூழ்ந்துகொள்ள, வாழைப்பழங்கள் கொடுத்தார். அப்படியே, மலைவாழ் மக்களான பழங்குடியினருக்கும் அரிசி, காய்கறிகள், போர்வைகளைக் கொடுத்துவிட்டு, “என்னமோ விட்டுப்போச்சுன்னு நினைச்சேன். இப்ப எல்லாம் சரியாயிருச்சு. மனுஷன மாதிரி்தானே விலங்குகளும்? வீட்ல வளர்க்கிற நாயை நல்லா பார்த்துக்கிறோம்ல. வேளாவேளைக்குச் சோறு வைக்கிறோம்ல. அதுகணக்கா, ரோட்டுல, காட்டுல திரியிற விலங்குகளையும் காப்பாத்துறதுக்கு நாம கடமைப்பட்டிருக்கோம்.” என்று மெய்சிலிர்த்து, நட்பு வட்டத்தில் உள்ளவர்களையும், இதே ரீதியில் ‘கருணை மழை’ பொழியும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.
நல்லவேளை, இம்சை அரசன் 23- ஆம் புலிகேசி திரைப்படத்தில், எதற்கெடுத்தாலும் வடிவேலுவை புகழும் புலவர்கள் போல யாரும் கே.டி.ராஜேந்திரபாலாஜி அருகில் இல்லை. இருந்திருந்தால் ‘நீ வாழ்க! நின் கொடை வாழ்க!’ என்று பாராட்டி, தகுந்த வெகுமதி பெற்றிருப்பார்கள்.