உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (07.12.2019) மாலை 04.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது.
வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 9- ஆம் தேதி முதல் தொடங்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16- ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19- ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணிக்கு நிறைவடையும். பதிவான வாக்குகள் 02.01.2020 அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு செய்து முடித்த பிறகே தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்துக்குரியது. புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தவில்லை. நேர்மையான,சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியுள்ளார்கள். அதிமுக அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையர் மாறியுள்ளது ஜனநாயகத்திற்கு வெட்கக்கேடு. இவ்வாறு தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுளளார்.