'வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்; அதைத் தொடர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 1- ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 2- ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், டிசம்பர் 2- ஆம் தேதி தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 2- ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடஙக்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 3- ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டி (சேலம்)- 4 செ.மீ., போளூர் (திருவண்ணாமலை)- 3 செ.மீ., புதுச்சத்திரம் (நாமக்கல்)- 3 செ.மீ., பாபநாசம், மணிமுத்தாறு (நெல்லை), குன்னூர் (நீலகிரி), ஆத்தூர் (சேலம்)- தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.' இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.