Skip to main content

"வீட்டிலேயே ரெம்டெசிவிர் போடாதீங்க" - தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

tamilnadu health secretary pressmeet at chennai

 

சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கான 40% படுக்கைகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் 50.8% பேர் வீட்டுத் தனிமையிலும், 8.85% பேர் கோவிட் கேர் மையத்திலும் உள்ளனர். தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேவையற்றப் பதற்றத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது.

 

கரோனா சங்கிலி பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் 2,400 படுக்கைகளை ஏற்படுத்த உள்ளோம். சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளது. சோதனை முயற்சியாக, நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சில நபர்கள் வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிப் போடுகின்றனர்; அது தவறானது. மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பிறகே ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் நாளை (25.04.2021) முழு ஊரடங்கில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தடையில்லை." இவ்வாறு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்