முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையைத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "கரோனா தடுப்பூசி வந்த பிறகு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒத்திகை நடைபெறுகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவிடப்படும். கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டப் பின் பயனாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இரத்த அழுத்தம், காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு கண்காணிக்கப்படுவர். தமிழகத்தில் 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான வசதி இருக்கிறது. குறைந்த வெப்பநிலையில் தடுப்பூசியை சேமித்து வைக்கும் வசதியும் தமிழகத்தில் உள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கு 46,000-க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். சுகாதாரத்துறை, காவல்துறை, ஊடகத்துறையினர் உள்பட முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் தினமும் 100 பேர் என 6 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்படும். கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு 28 நாட்கள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும்" என்றார்.