வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் மற்றும் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர சாராயத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கள்ளச்சாராய ஊரல்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலெட்சுமி, "வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள 20 உள்வட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் 20 குழுக்களும், மாவட்டத்திலுள்ள 5 மலைக் கிராமங்களுக்கு 1 குழு வீதம் 5 குழுக்களும் என மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.
மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் சார்பில் வனத்துறையினருக்கு சோதனை சாவடிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மேலும் வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் அவ்வப்பொழுது திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
போதைப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் தொடர்புடைய வணிக நிறுவனம் அல்லது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், "என எச்சரிக்கை விடுத்தார்.