சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க 33 வார்டுகளில் 'நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மண்டலமான ராயபுரத்தில் 'நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்' தொடங்கப்பட்டது. அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கிருமிநாசினி, முகக்கவசம், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், மருத்துவக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். தொற்று பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாகப் பரிசோதிக்கப்படும். 14 நடமாடும் எக்ஸ்- ரே வாகனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. 500 சுகாதாரப் பணியாளர்கள் கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கரோனா தடுப்புப் பணிகளை அரசு தொய்வின்றி செய்து வருகிறது. கபசுர குடிநீர் பாக்கெட், வைட்டமின் மாத்திரைகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பேசிய சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி, "சென்னையில் திடீர் நகர், காக்காதோப்பு போன்ற பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் உள்ளன. சென்னையில் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தெர்மல் பரிசோதனை நடத்தப்படும். பொது மக்கள் கரோனா மையங்களுக்கு வரத் தயங்கும் பகுதிகளில் இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது" என்றார்.