தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. சென்னையில் மட்டுமே ஒரு நாள் பாதிப்பு 7,000-த்தையும் கடந்து செல்கிறது. 1,65,000 பேர் மருத்துவமனைகளிலும், இந்த எண்ணிக்கைக்கு இணையாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்பவர்களும் இருக்கின்றனர். சென்னையில் மட்டுமே 35,000 பேர் ஹோம் கோரண்டைனில் இருக்கிறார்கள். மருத்துவப் படுக்கைகளுக்காகவும் மருத்துவ ஆக்சிஜனுக்காகவும் மக்களும் நோயாளிகளும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறையும் நீடித்தபடி இருக்கிறது.
கரோனா பரவலின் இரண்டாம் அலை கட்டுக்கடங்கமால் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஒருநாளைக்கு 20 மணி நேரம் முதல்வர் மு.க. ஸ்டாலினும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க, தமிழக சட்டப்பேரவைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (13/05/2021) மாலை 05.00 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சிக்கு 2 பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, மமக, த.வா.க., கொ.ம.தே.க. கட்சிகளின் சட்டப்பேரவை தலைவர்கள் என யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. காரணம், இக்கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவின் கணக்கில் இருக்கிறார்கள்.