அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'கரோனா பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கரோனா தொற்று உறுதியானவர்கள் பணியாற்றிய அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு செலவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் போன்றவர்களுக்கு மாத ஊதியத்தை சீராக வழங்க வேண்டும். 'டி' பிரிவுக்கும் கீழுள்ள பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 11- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை ஒரு லட்சம் கோரிக்கை கடிதங்களை அனுப்ப உள்ளோம்.
மேலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆகஸ்ட் 10- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டு, அனைத்து மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 10- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.