தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 72 மணி நேரத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாராபுரம் (திருப்பூர்)- 17 செ.மீ., பிளவக்கல் (விருதுநகர்)- 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.