மருத்துவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில், இன்று (04/02/2021) மாலை 5.00 மணியளவில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் சார்பில், தமிழ்நாடு காவல் துறையினருக்கான, புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு விருது வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "நாட்டிலேயே இல்லாத வகையில், அதிக மக்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிக அளவிலான, முன்னோடியான சுகாதாரத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில்தான், மகப்பேறு இறப்பு விகிதம் (தாய், சேய்) நாட்டிலேயே குறைவானதாகும். அமைச்சர் காமராஜ் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், காவலர்களுக்கும் நன்றி. எத்தனை துறைகள் இருந்தாலும் சுகாதாரத் துறைக்குத்தான் தனிச்சிறப்பு என்பது பெருமைக்குரியது" என்றார்.