கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கரோனாவைத் தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. விமான நிலையங்களில் 2.10,538 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.
கரோனா பரிசோதனைக்காக 12 அரசு ஆய்வகங்களும், 7 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6,095 ஆகும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 பேர், தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன. 21 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,371 வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2,500 வென்டிலேட்டர்கள் வாங்கவும் தமிழக அரசு ஆர்டர் தந்துள்ளது. முகக்கவசம், மாத்திரைகள் போதிய அளவு உள்ளன.
தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வரும். கரோனா பரிசோதனையை விரைவுபடுத்த ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தப்பட உள்ளது. கரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. கரோனா நோயாளிகளுக்காக 14,525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் சுமார் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களின் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூபாய் 40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருள்கள் கூட்டுறவுத்துறை மூலம் வாங்கப்படும்.
திருமண மண்டபங்களில் 73,836 பேர் தங்க வைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுகின்றன. கரோனாவின் தாக்கத்தைப் பொறுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் 2ம் நிலையில் உள்ள கரோனா தாக்கம் 3-ம் நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது.
நோய்த் தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினர், அருகில் வசிப்பவர்களுக்கும் ரேபிட் டெஸ்ட் நடத்தப்படும். 12 நல வாரியங்களில் உள்ள 8.20 லட்சம் தொழிலாளர்களுக்குத் தலா ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
கரோனா பாதுகாப்பு பணியின் போது மரணமடைந்த மயிலாப்பூர் ட்ராபிக் காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காவலர் அருள்காந்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். கரோனா பாதுகாப்பு பணியின் போது இறப்போருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
கரோனா இருப்பதை மறைத்தால் சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர். கரோனா தடுப்பு பணிகள் என்பது கூட்டுப்பொறுப்பு. 10- ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 10- ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான முக்கியமான தேர்வாகும்.
கரோனா தடுப்பு பணிகளுக்குப் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்க வேண்டும். கரோனா தடுப்பு பணிகளுக்குப் பொதுமக்கள் 100 ரூபாய் கூட நிதியாக வழங்கலாம்." இவ்வாறு முதல்வர் பேசினார்.