ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு ராபிக் நகர் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடையை அப்பகுதியில் சமீபத்தில் புதியதாய் அமைத்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் பெண்கள் இந்த பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரிக்கு போய்விட்டு வரும் பெண் பிள்ளைகளையும் குடிகார கும்பல் கிண்டல் செய்கிறது என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு தந்துள்ளனர்.
மதுக்கடை வரப்போகிறது என தெரிந்தபோதே, இது குடியிருப்பு பகுதி இங்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து செயலாளர் போன்றோர் ஒப்புதல் கடிதம் வழங்க, தனிநபரின் இடத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு அரசின் டாஸ்மாக் நிர்வாகம் கடையை திறந்துவிட்டது.
இந்நிலையில் குடிக்காரர்கள் தொல்லை அதிகரித்ததால் பிப்ரவரி 16ந்தேதி மாலை அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு கடை முன் வந்து நின்று கடையை மூடு என்று கோஷமிட்டனர். பின்னர் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். கடை ஊழியர்கள் டாஸ்மாக் கடையை மூடிவிட்டனர்.
அதேநேரத்தில் அதேபகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் இந்த மதுபானக்கடையை அகற்றகூடாது, இந்த கடை இங்கயில்லை என்றால் நாங்கள் தூரமா போய் தான் சரக்கு வாங்கனும் எனச்சொல்லி ஒரு கும்பல் போராட்டத்தில் ஈடுப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது. எங்களுக்காக மட்டும்மில்லை, உங்க வீட்டு பெண்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் தான் நாங்கள் போராடுகிறோம் எனச்சொல்ல, அதெல்லாம் நீங்க பேசக்கூடாது, கடையை மூடச்சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கறமாதிரி, திறக்கனும்ன்னு சொல்றதுக்கும் எங்களுக்கு உரிமையிருக்கு எனச்சொல்லி விதன்டாவாதம் செய்ய பொதுமக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இந்த தகவல் தெரிந்து வாலாஜா போலீஸார் சம்பவயிடத்துக்கு வந்து இருதரப்பையும் போராட்டத்தை கைவிட செய்து மனுவா தாங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கச்சொல்றோம் எனச்சொல்லியுள்ளனர். கடையை மூடச்சொன்ன பொதுமக்கள் காவல்துறையினரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதில் கோபமான போலீஸார், எங்களையே கேள்வி கேட்கறிங்களா என போராட்டம் செய்த பொதுமக்களை இழுத்து வண்டியில் ஏற்ற முயன்றனர். இதனால் பிரச்சனை பெரியதானது.
கடையை மூடக்கூடாது எனச் சொன்னவர்களை எதுவும் சொல்லவில்லை போலீஸ். தங்கள் குடும்பத்தை பற்றி கவலையில்லை, எங்களுக்கு டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கூடாது என போராடியது பலரை அதிர்ச்சியடைய செய்தது.