திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் புகழ்பெற்றது. மலையை அண்ணாமலையாராக நினைத்து தினமும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பௌர்மணி அன்று மட்டும் லட்சக்கணக்கில் வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநில பக்தர்கள் திருவண்ணாமலை வந்து 14.5 கி.மீ தூரம் சுற்றளவுள்ள மலையை வலம் வருவார்கள்.
கரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்கு லட்ச கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கடந்த ஏப்ரல், மே, ஜூன் என தொடர்ச்சியாக 3 மாதங்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஜூலை மாதம் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஜூலை 4 மற்றும் 5ந் தேதி பௌர்ணமி தினம் என்பதால் அன்றைய தினம் கிரிவலம் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,182 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.