தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14- ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதில் "தமிழகத்தில் மார்ச் 31- ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மளிகை கடைகள் வீடுகளுக்கேச் சென்று பொருட்களை வழங்கலாம். உணவகங்கள், மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், மளிகை கடைகள் இயங்க நேர வரம்பு ஏதும் குறைக்கப்படவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைப்பு. அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதைக் குழுக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
ஊரடங்கால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாததால் பண வசூலை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் பண வசூலை நிறுத்தி வைக்க அறிவுரை. உத்தரவை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை. உணவுப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் ZOMATO, SWIGGY- க்கு தடை தொடரும்.
கால்நடை, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு தடையில்லை. மார்க்கெட், சந்தையில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க, பெரிய இடங்கள், மைதானங்களில் காய்கறிகள் விற்கலாம். காய்கறி, பழ வகைகளை விற்கும் போது 3 அடி தூரம் மக்களிடையே இடைவெளி இருக்க வேண்டும். காய்க்கறி கடைகளுடன் மருந்துக்கடைகள், மளிகை கடைகளிலும் மக்களிடையே இடைவெளி அவசியம்.
வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேரின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. 54 ஆயிரம் பேரும் வெளியே வராதவாறு, அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டோருக்கு தேவையான பொருட்களை வழங்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு, காசநோய், எச்ஐவி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவசர தேவைக்கு 108-ஐ தொடர்பு கொள்ளலாம். விவசாயம் தொடர்பான எந்தப் போக்குவரத்துக்கும் தடையில்லை". இவ்வாறு முதல்வர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.