தமிழகத்தில் நாளையுடன் 8- ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் இன்று (29/09/2020) ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய முதல்வர் பழனிசாமி, "மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு செல்வது குறித்தும் மருத்துவக்குழுவுடன் ஆலோசிக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தபின் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 71 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை சுமார் ரூபாய் 7,800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா சிகிச்சை மையங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள அக்டோபர் 1- ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு முதல்வர் கூறினார்.