சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஐந்தாவது முறையாக பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும், கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவைக் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஆலோசனை செய்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கரோனாவைத் தடுக்க ஆறு முறை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. மக்கள்தொகை அதிகம் உள்ள சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனாவைப் பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் மார்ச் 24- ஆம் தேதி நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழுவுடன் 14 முறை ஆலோசிக்கப்பட்டது. 12 மண்டல அளவிலான சிறப்புப் பணிக்குழு அமைத்து கரோனா பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொழில்துறையினருக்கு அளிக்க வேண்டிய தளர்வுகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. சிறப்புக் குழு, மருத்துவ நிபுணர் குழு, தலைமைச் செயலாளர், ஆட்சியர்களுடன் அரசு தொடர்ந்து ஆலோசனை. கரோனாவை எதிர்கொள்ள புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் அரசின் செலவில் 170 ரயில்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. 24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முடிதிருத்தும் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. அம்மா உணவகங்கள், சமூக உணவுக்கூடங்கள் மூலம் நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்களைத் தமிழகத்திற்கு ஈர்க்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3,371 வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளது. மும்மடிப்பு முகக்கவசங்கள் 32 லட்சம், என் 95 முகக்கவசங்கள் 3.5 லட்சம் கையிருப்பில் உள்ளது. தமிழகம் முழுவதும் 70 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.4% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசின் நடவடிக்கையால் உணவுப்பொருட்கள் காய்கறிகளின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கும் இடையூறின்றி உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. சுகாதாரம், காவல், வருவாய் என அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மருத்துவர்களின் முயற்சியால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மருத்துவர்கள், செலிவிலியர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாகச் செயல்படுவதாக முதல்வர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொதுமுடக்கம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை (30/05/2020) மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்ன தளர்வுகள் அளிக்கலாம்? என முதல்வர் கேட்டறிகிறார். பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி முதல்வர் ஏற்கனவே மே 25- ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.