டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மாநில முதல்வர்கள் உடனான மகாத்மா காந்தியின் 150- வது பிறந்தநாள் விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஜனநாயக நாட்டில் அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்சனை ஏற்படாது. மாநில அரசை பொறுத்த வரை சட்டம்- ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடைபெறும். அவமதிப்பு வழக்கு நீதிமன்றத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உள்ள பிரச்சனை; அரசுக்கு அல்ல; குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சித் தேர்தலில் எந்த பாதிப்பும் வராது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தை தூண்டுவதாக முதல்வர் குற்றச்சாட்டினார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே எங்களது கொள்கை. எவ்வித நிர்பந்தமும் இன்றி குடியுரிமை சட்டத்துக்கு அதிமுக ஆதரவளித்தோம்". இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.