தமிழகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டம் அதிகளவு கரோனா நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஜீலை 1ஆம் தேதி முடிவுப்படி 1,861 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 800 பேர் குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இன்னும் 1,100 பேர் சிகிச்சையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிம்டம் ஏ என்கிற அறிகுறி இல்லாதவர்களைக் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் சிறப்பு மருத்துவமனை வளாகங்களில் இன்னும் கூடுதல் படுக்கைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும். அதன்படி 2 ஆயிரம் படுக்கைகளை தச்சூர் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகம், திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வளாகம் உட்பட சில இடங்களில் கூடுதல் படுக்கைகளை அமைத்து வருகிறது.