14 நாட்கள் அரசு முறை பயணமாக லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வெளிநாடு பயணம் மேற்கொள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் முதல்வருக்கு பூங்கொத்து உற்சாக வரவேற்பை அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு செல்லும் முதல்வர் பன்னாட்டு நிறுவனங்களுடனும், தமிழ் தொழில் அமைப்பினருடனமும் ஆலோசனை செய்கிறார்.
லண்டனில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் களின் பணித்தர மேம்பாடுகள் தொடர்பாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆஸ்பத்திரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார். இங்கிலாந்தின் அவசர ஆம்புலன்ஸ் சேவை மற்றும் சக்போல்க் நகரில் உள்ள ‘ஐ.பி. சுவிட்ச் ஸ்மார்ட் கிரிட்’ நிறுவனத்தை பார்வையிடுகிறார். அந்நாட்டு எம்.பி.க்களையும் சந்தித்து பேசுகிறார். இந்துஜா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் அதிபர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
லண்டன் பயணத்தை முடித்து, செப்டம்பர் 1- ஆம் தேதி மாலை லண்டன் விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்காவின் நியூயார்கிற்கு செல்லும் முதல்வர் 8 நாட்கள் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துக்கிறார்.
செப்டம்பர்- 7 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதல்வர் துபாய் செல்கிறார். பின்பு 9- ஆம் தேதி இரவு துபாய் விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்புகிறார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் 3 நாடுகளுக்கு 14 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், தனது முதல்வர் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் முதற்கட்டமாக செல்லும் லண்டன் பயணத்தின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் முதல்வர் உடன் செல்கின்றனர்.
அதன் பிறகு முதல்வர் லண்டன் பயணத்தை முடித்து அமெரிக்கா செல்லும் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை திரும்பி விடுவார். தமிழக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத் ஆகியோர் சென்னையில் இருந்து நேரடியாக அமெரிக்கா சென்று முதல்வர் பயணத்தில் இணைகின்றனர்.
தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முதல் 7 நாட்கள் அரசுமுறை பயணமாக சுவீடன் மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று கல்வியாளர்களை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பயணத்தை தொடங்கும் முன் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடுகளுக்கு செல்கிறேன் என்றும், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அதில் என்ன மர்மம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.