ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (06/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்மையில் மத்திய அரசு, 1952- ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை, வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 என வெளியிட்டுள்ளது. இந்த வரைவுச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளத் திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board Of Film Certification) மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவைத் திரும்பப் பெறுமாறும், இது தொடர்பான முயற்சிகளை கைவிடுமாறும் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.