






டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று (17/06/2021) மாலை 05.00 மணிக்கு சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.
அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சரை மத்திய அரசின் பணியில் உள்ள தமிழக பணிநிலைப் பிரிவைச் (Cadre) சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி மற்றும் இந்திய வனப் பணி அலுவலர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். இந்த நிகழ்வின் போது தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உடனிருந்தார்.
டெல்லி தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50,000- க்கான காசோலையை வழங்கினர்.