தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்கள் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்தனர்.
பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் புதிய அமைச்சர்களுக்கும் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆகியோருடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தனபாலும் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர்.
அதைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு முதலமைச்சர் கண்கலங்கினார். பின்பு, தாயார் தயாளு அம்மாளிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசிபெற்றார்.
அங்கிருந்து சென்னை மெரினாவிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்குச் சென்ற மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.