சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணி கட்சிகள் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
இந்த பாராளுமன்ற தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற தேர்தல். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கோட்டையாக திகழ்கின்ற பகுதி சேலம். இது மென்மேலும் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி,தேமுதிக போன்ற கட்சிகள் இணைந்து திமுகவை எதிர்க்கும் என்ற வகையிலே இரும்புக் கோட்டையாக இருக்கின்ற பகுதி சேலம் பாராளுமன்ற தொகுதி.
ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். நேற்று கூட நாமக்கல்லில் பேசியிருக்கிறார் அதிமுக ஆட்சியிலே என்ன திட்டத்தை நிறைவேற்றுனீர்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கின்றார். ஸ்டாலின் அவர்களே சேலம் வந்து விட்டுப் போய் இருக்கின்றீர்கள். நீங்கள் வருகின்ற பொழுது இங்கே இருக்கின்ற பாலங்கள் எல்லாம் அதற்கு சாட்சியாக இன்றைக்கு நின்று கொண்டிருக்கிறது. இன்று சேலம் மாநகரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக இருப்பதற்காக எங்கள் ஆட்சியில் எங்கெங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் இருக்கின்றதோ அங்கெல்லாம் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு துவக்கப்பட்ட இருக்கின்றது. இன்னும் பல பாலங்கள் கூடிய விரைவில் நிறைவு பெற்று திறக்கப்படுகின்றன.
மக்களுக்காக சேவை செய்கின்ற அதிமுக அரசை இன்றைக்கு கொச்சைப்படுத்தி ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். நேற்றைய கூட்டத்தில் பேசுகின்ற பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கை கிழியப்போகிறது என சொல்லி இருக்கின்றார். இந்த தேர்தலுக்குப் பிறகுதான் இந்த எடப்பாடி பழனிச்சாமியினுடைய அரசியல் வாழ்க்கை துவங்கும். நீங்கள் கண்ட கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏற்கனவே கண்ட கனவெல்லாம் கானல் நீராகி விட்டது அந்த விரக்தியில் இருக்கிறார் ஸ்டாலின். எப்பொழுதும் அவருடைய கனவு முதலமைச்சர் நாற்காலி. எந்த காலத்திலும் அந்த கனவு நிறைவேறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் போட்ட திட்டம் அனைத்தும் தவிடு பொடியாகி விட்டது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் அதுவும் முடியவில்லை, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள் அதுவும் முடியவில்லை இப்போது தேர்தல் வந்து இருக்கின்றது. சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிலுமே நூற்றுக்கு நூறு சதவீதம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.