தமிழக பாஜக புதிய தலைவராக எல்.முருகன் நியமனம் செய்து, பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பர் 1- ஆம் தேதியில் இருந்து பாஜக தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சுமார் 15 வருடம் வழக்கறிஞர் பணியில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த எல்.முருகன், என் மீது நம்பிக்கை வைத்து பதவி தந்துள்ளார்கள்; அதற்கேற்றவாறு செயல்படுவேன் என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவித்தார்.