தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி தர வேண்டும் என சட்டசபையில் கூட பாஜக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எதற்காக தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது. எந்த காலத்திற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. இன்று பாஜக கட்சியினருக்கு நாங்கள் சொல்லி இருப்பது என்னவென்றால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒரு லட்சம் விநாயகரை பாஜக தொண்டர்கள் அவர்களது வீட்டு வாசலில் வைத்து வழிபட போகின்றோம். 10, 11, 12ஆம் தேதி என மூன்று நாட்களுக்கு எங்கள் வீட்டு வாசலிலேயே சிலை வைப்பது தனிமனித உரிமை. வழிபடுவதற்கு அரசு எந்த தடையும் செலுத்த முடியாது. ஒரு லட்சம் விநாயகரை வீட்டு வாசலில் வைத்து வழிபடுவோம்.
தமிழக அரசு மனதை மாற்றிக் கொள்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இந்தக் கரோனா காலகட்டத்தில் அரசு சொல்லுகின்ற பேச்சுக்கு மரியாதை கொடுக்கின்றோம். அதே சமயத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறோம். கட்டுப்பாடுகளை விதித்து இதற்கு அனுமதி கொடுங்கள். புதுச்சேரி கவர்னர் கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கியுள்ளார். அதேபோல் மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசு அதிகாரிகளும் நமது முதலமைச்சரும் வெளியே வராமல், நாங்கள் நேரடியாக எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது ஒரு ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் நம்மைவிட அதிகமாக தொற்று இருக்கக்கூடிய மகாராஷ்டிராவில் கூட அனுமதி கொடுக்கும் பொழுது, பாண்டிச்சேரி அனுமதி கொடுக்கும் பொழுது தமிழகத்தில் மட்டும் ஏன் கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி கொடுக்காமல் இருக்கிறீர்கள். எனவே தனி மனித உரிமையாக ஒரு லட்சம் விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடுவோம்'' என்றார்.