
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசுகையில், ''சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என்பது திரும்பத் திரும்ப குறிப்பாக நடுத்தர ஏழை மக்கள் மீது மிகப்பெரிய சுமையை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வால் மின்சாரத் துறைக்கு 6000 கோடி ரூபாய் கூடுதல் வாரியாக கிடைக்கும் என சொல்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் குறிப்பாக போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து சேர்க்கின்ற போக்குவரத்து கட்டணம் என்பது கடுமையாக உயரப்போகிறது. இவை மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற சுமை போதாதென்று இப்போது இந்த மின் கட்டண உயர்வால் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுடைய விளையும் உயரப்போகிறது.
பல்வேறு விதங்களில் மக்களை பாதிக்கக்கூடிய இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. நிதிச் சுமை என சொல்லும் தமிழக அரசு, ஜிஎஸ்டி வரிவசூலில் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை உயர்த்த சர்வதேச அளவில் இருக்கக்கூடிய நிதி விற்பனர்களை எல்லாம் வைத்து கமிட்டி போடுகிறோம் என்று முதல் பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இதுவரைக்கும் சர்வதேச முக்கியஸ்தர்கள், விற்பனர்கள் என்ன இந்த அரசுக்கு வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசு தான் இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கி இருக்கின்ற அரசு'' என்றார்.