தமிழகம் முழுவதும் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, கிசான் முறைகேடு தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கிசான் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒருவரால் மட்டுமே பயன்பெற முடியும். நேரடியாக மக்களோ, விவசாயிகளோ முறைகேட்டில் ஈடுபட்டது குறைவாகவுள்ளது. இடைத்தரகர்களே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். கிசான் திட்டத்தில் தகுதியற்ற நபர்களுக்கு ஒரு ரூபாய் கூட போகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அப்பாவி மக்களிடம் தகவல்களைப் பெற்று இடைத்தரகர்கள் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி தனிநபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிசான் முறைகேடு தொடர்பாக விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 6 லட்சம் பேர் வரை கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தனர். விவசாயிகளே நேரடியாக கிசான் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளும் முறை தற்போது உள்ளது. கிசான் திட்டத்தில் தகுதியான நபர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்யும். கரோனா பணம் வருவதாக விவசாயிகளைக் கணினி மையங்கள் ஏமாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். கிசான் திட்ட முறைகேட்டில் வேளாண்துறை இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் இதுவரை ரூபாய் 32 கோடி நேரடியாக மீட்கப்பட்டுள்ளது. நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்தே பணத்தைத் திரும்ப பெற மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிசான் திட்ட முறைகேடு புகாரில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு சம்பவத்தில் 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது. குற்றவாளி தனி நபராக இருந்தாலும், அரசு அதிகாரியாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கிசான் திட்டத்தின் கீழ் ரூபாய் 110 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 41 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு அரசின் மானிய தொகை கிடைக்கும். தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசின் மானியத் தொகை நிச்சயம் கிடைக்கும். அடுத்த தவணைத் தொகைகள் செலுத்தப்படுவதற்கு முன் முறைகேடுகள் சரி செய்யப்படும்." இவ்வாறு வேளாண்துறை செயலர் கூறினார்.