முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் சிறைச்சாலையிலிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. நீண்ட அழுத்தத்திற்கு பிறகு தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அவற்றை அனுப்பி வைத்தார்.
இதனிடையே பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். இந்திய அரசியலமைப்பு சட்டம் 142 விதிகளின் படி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம் பேரறிவாளனின் 31 ஆண்டு சிறை வாசம் முடிவுக்கு வந்தது. மேலும் இதே வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் போன்றோரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் நளினி, ரவிச்சந்திரன் இருவரும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பரோலில் அவர்களது வீடுகளில் உள்ளார்கள்.
இந்நிலையில் பேரறிவாளனின் விடுதலையினை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள முருகன்குடி கடைவீதிகளில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.